இந்தியா
நடிகை உள்பட ஒரே நாளில் 10 பேர்களின் வங்கிக்கணக்கில் மோசடி.. லட்சக்கணக்கில் இழப்பு..!

பிரபல நடிகை உள்பட ஒரே நாளில் 10 பேர்களின் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தொழில்நுட்பம் வளர வளர ஆன்லைன் மூலம் மிக எளிய முறையில் பண பரிமாற்றம் நடந்து கொண்டு வரும் நிலையில் அதிக அளவில் முறைகேடுகளும் மோசடிகளும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சரி பார்க்கப்படாத லிங்கை கிளிக் செய்ததன் மூலம் பிரபல தொலைக்காட்சி நடிகை உள்பட 40 பேர்களின் வங்கி கணக்குகளில் இருந்து லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறியப்படாத நபர்களிடமிருந்து வந்த குறுஞ்செய்தியில் கேஒய்சி மற்றும் பான் விவரங்களை புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அந்த குறுஞ்செய்தியை சரிபார்க்காமல் வாடிக்கையாளர்கள் லிங்கை கிளிக் செய்து லட்ச கணக்கில் இழந்துள்ளதாகவும் ஒரே நாளில் 40 வாடிக்கையாளர்கள் பண இழப்பை சந்தித்ததால் மும்பை போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வங்கி வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்களை வங்கி கேட்காது என ஏற்கனவே பலமுறை விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தும் வாடிக்கையாளர்கள் இன்னும் விழிப்புணர்வு அடையாததை அடுத்து இதுபோன்ற போலி குறுஞ்செய்திகள் மூலம் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கேஒய்சி மற்றும் பான் கார்டு விவரங்களை கேட்டு வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள் என்றும் அந்த குறுஞ்செய்தியை வாடிக்கையாளர்கள் போலி என தெரியாமல் கிளிக் செய்தால் வங்கியின் போலி இணையதளத்திற்கு அழைத்துச் செல்லும் என்றும் அதில் அவர்கள் ஐடி, பாஸ்வேர்ட் உள்ளிட்ட ரகசியங்களை உள்ளிடுமாறு கேட்கும் போது மோசடியாளர்கள் அதை பயன்படுத்தி உடனடியாக அவர்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை மோசடி செய்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொலைக்காட்சி நடிகை ஸ்வேதா மேனன் உள்பட 40 பேர்கள் இது குறித்து காவல்துறையில் புகார் செய்துள்ள நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து புகார் அளித்த ஒருவர் கூறிய போது வங்கி அதிகாரி போல் நடிக்கும் ஒரு பெண்ணிடம் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும் உடனே அவர் தனது மொபைல் எண்ணில் பெற்ற ஓடிபியை பகிர்ந்ததால் அவரது வங்கி கணக்கிலிருந்து 56 ஆயிரம் டெபிட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதேபோல் நடிகை ஸ்வேதா மேனன் இது குறித்து கூறிய போது கடந்த வியாழக்கிழமை தனக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்ததாகவும் அந்த இணைப்பை கிளிக் செய்து அடுத்த நிமிடமே தன்னுடைய வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணமும் போய்விட்டது என்றும் புகார் அளித்துள்ளார்.