சினிமா
பிரபாஸை பின்னுக்குத் தள்ளிய அல்லு அர்ஜூன்!

சம்பள விஷயத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் பிரபாஸை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் வந்துள்ளார்.
இந்திய சினிமாக்களில் கவனிக்கப்படும் முக்கிய இடத்தில் தெலுங்கு சினிமா தற்பொழுது இருக்கிறது. ‘புஷ்பா’, ‘ஆர்.ஆர்.ஆர்’ என சமீப காலங்களில் வெளியாகும் படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், தெலுங்கில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக பிரபாஸ் இருந்து வந்தார் தொடர்ந்து பான் இந்திய படங்களில் கவனம் செலுத்தி வரும் இவருக்கு சம்பளம் மட்டும் 100 கோடி ரூபாய் என பேசப்பட்டு வருகிறது.

Ally Arjun

Ally Arjun
தெலுங்கில் இதுவரை எந்த நடிகரும் வாங்காத சம்பளம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது ‘புஷ்பா’ வெற்றிக்கு பிறகு பான் இந்திய அளவில் நடிகர் அல்லு அர்ஜூனின் மார்க்கெட் மதிப்பும் உயர்ந்திருக்கிறது. இந்த படம் வெளியாகி வெற்றி பெற்றதால் தற்பொழுது அடுத்து பூஷன் குமாரின் டி-சீரிஸ் தயாரிப்பில், அர்ஜூன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், புதிய படத்தில் அல்லு அர்ஜுன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதில் அவருக்கு சம்பளம் கிட்டத்தட்ட 125 கோடி ரூபாய் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அவர் பாலிவுட் என்ட்ரி கொடுக்க உள்ளார். 125 கோடி ரூபாய் சம்பளம் என்பதால் பிரபாஸை பின்னுக்கு தள்ளி தற்போது அல்லு அர்ஜுன் முன்னிலையில் இருக்கிறார். மேலும், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்கு ஒருவேளை ஆஸ்கர் கிடைத்தது என்றால் அதன் மூலம் தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இவர்களின் சம்பளமும் 100 கோடியை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்லு அர்ஜுன் தற்பொழுது ‘புஷ்பா 2’ படத்திலும் தீவிரம் காட்டி வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கிறார். முதல் பாகத்தில் அதிகம் இடம்பெறாத நடிகர் பகத் பாசிலின் போர்ஷனும் இந்தப் பாகத்தில் அதிக அளவில் இடம்பெற உள்ளது.