வணிகம்

குழந்தை பிறக்க இன்னும் ஒரே ஒரு வாரம்.. திடீரென வந்த வேலைநீக்க அறிவிப்பு: கூகுள் பெண் ஊழியரின் சோகப்பதிவு!

Published

on

By

குழந்தை பிறக்க இன்னும் ஒரே ஒரு வாரம் இருக்கும் நிலையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கூகுள் நிறுவனத்தில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக மெயில் வந்திருப்பதாக தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் கண்ணீருடன் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் மிகப்பெரிய நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை கடந்த சில நாட்களுக்கு முன்னால் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாகவும் இதற்கு தான் முழு பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்திருந்தார்.

வேலைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பலர் தங்களது சோக கதைகளை லிங்க்ட்-இன் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் இன்னும் ஒரே வாரத்தில் தனக்கு பிரசவ விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென தனது மின்னஞ்சலில் தான் வேலை நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளிவந்திருப்பதை குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார். இணையதள பயனாளிகளை கண்ணீரை வழிக்கும் இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் கர்ப்பமாகி 8வது மாதத்தில் இருக்கிறேன். இன்னும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்தில் நான் என் குழந்தையை பார்க்க ஆவலாக இருக்கும் நேரத்தில் திடீரென எனக்கு மெயில் வந்தது. நான் ஒரு ப்ரோக்ராம் மேனேஜராக கூகுள் நிறுவனத்தில் பணி செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த வேலை பறிபோனது என்ற மெயிலை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.

ஆனால் என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்பதற்காக நான் என் உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அது மட்டுமின்றி நான் கவனிக்க வேண்டிய ஒரு சிறு குழந்தையும் என்னுடன் உள்ளது. அந்த குழந்தைக்காகவும் நான் என் மனதை தேற்றிக் கொண்டிருக்கிறேன். எனக்கு பிரசவ விடுமுறை இன்னும் சில நாட்களில் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென எனக்கு இந்த வேலைநீக்க அறிவிப்பு வந்துள்ளதால் நான் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறேன், என் கைகள் நடுங்குகிறது.

நான் டெலிவரி மற்றும் குழந்தையை கவனித்துக் கொள்ளும் நிலையில் இருப்பதால் என்னால் வேறு வேலையை தேடுவதற்கு வாய்ப்பே இல்லை. இந்த நிலையில் கடவுள்தான் என்னை காப்பாற்ற வேண்டும்’ என்று மிகவும் சோகத்துடன் பதிவு செய்துள்ளார். அவரது இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Trending

Exit mobile version