இந்தியா
ரூ.4400 கோடி வருமானம்.. மாநில அரசு போல் பட்ஜெட் போட்ட திருப்பதி தேவஸ்தானம்..!

உலகிலேயே பணக்கார கோயில் என்று கூறப்படும் திருப்பதி கோவில் தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகளை போல் பட்ஜெட் போட்டு வருகிறது என்பதும் கடந்து சில ஆண்டுகளாக இந்த பட்ஜெட்டை மாநில அரசு ஒப்புதல் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் 2023 – 24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த பட்ஜெட்டை மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பட்ஜெட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 43 சதவீதம் அதிகமாக வருமானம் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 3096 கோடி மொத்த வருமானம் இருந்தது என்றும் அதில் முதலீடுகளுக்கான வட்டி மட்டும் 900 கோடி வருமானம் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் சேவை வசதியை கொரோனா காலத்தில் ஏற்படுத்திய நிலையில் அந்த சேவையை கொரோனா காலத்திற்கு பின்னரும் தொடர்வதன் மூலம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது.
மேலும் பிரசாதம் விற்பனை மூலம் 500 கோடி ரூபாயும், தரிசன டிக்கெட் மூலம் 330 கோடி, ஆர்ஜிதா சேவை டிக்கெட் மூலம் 140 கோடியும், திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதிகள் மூலம் 129 கோடி ரூபாயும், முடி காணிக்கை விற்பனை மூலம் 126 கோடி ரூபாயும் வருமானம் இந்த ஆண்டு கிடைக்கலாம் என தேவஸ்தானம் கணித்துள்ளது.
இந்த பட்ஜெட்டில் செலவை பொருத்தவரை ஊழியர்களின் சம்பளமாக 1532 கோடியும், பொருட்கள் செலவாக 690 கோடி, முதலீட்டிற்கு 600 கோடி, பொறியியல் மூலதன செலவு 300 கோடி, இதர செலவுகள் 115 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பட்ஜெட்டில் பக்தர்களுக்கு லட்டு வழங்க கூடுதல் கவுண்டர்களை அமைப்பதற்கு 5 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஆண்டு திருப்பதியில் சில கட்டிடங்களை கட்டப் போவதாகவும் அதற்காக 4.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தான பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.