இந்தியா

ரூ.2000 நோட்டு செல்லாதா? மாநிலங்களவையில் பாஜக எம்பி பேச்சால் பரபரப்பு!

Published

on

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அப்போதிருந்த 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் பின் புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம் இயந்திரங்களில் புழங்குவது இல்லை என்றும் கிட்டத்தட்ட பொதுமக்களிடமும் 2000 ரூபாய் நோட்டுகள் புழங்கும் வழக்கம் குறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் பேசிய பாஜக எம்பி சுஷில்குமார் மோடி, ‘ 2000 ரூபாய் நோட்டுகளை படிப்படியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அத்தகைய நோட்டுக்கள் வைத்திருக்கும் குடிமக்களிடம் அதை இரண்டு ஆண்டுகளுக்குள் டெபாசிட் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

2000 ரூபாய் நோட்டுகள் தற்போது பெரும்பாலும் காணாமல் போய்விட்டதாகவும் அவை விரைவில் செல்லாது என்ற வதந்திகள் மக்கள் மத்தியில் இருப்பதாகவும் எனவே இதுகுறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டது என்றும் எனவே தற்போது பொதுமக்களிடம் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே அதிகமாகப் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், 2000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு போதைப்பொருள் பண மோசடி போன்ற சட்ட விரோத வர்த்தகங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டு 2000 ரூபாய் நோட்டு கருப்பு பணத்திற்கு வசதியாக மாறிவிட்டது என்றும் சுஷில்குமார் மோடி மாநிலங்களவையில் தெரிவித்தார். 2000 ரூபாய் நோட்டுகளை படிப்படியாக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் மக்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை அடுத்து 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version