இந்தியா
17 பயணிகளை விமான நிலையத்தில் விட்டுவிட்டு சென்ற விமானம்.. மீண்டும் சொதப்பல்..!

சமீப காலமாக விமானங்கள் பயணிகளை விமான நிலையங்களிலேயே விட்டுவிட்டு செல்லும் நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வரும் நிலையில் 17 பயணிகளை விமான நிலையத்தில் விட்டு விட்டு குவைத் செல்லும் விமானம் முன்கூட்டியே புறப்பட்டதால் விஜயவாடா விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜயவாடாவில் இருந்து குவைத்துக்கு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு முன்பாகவே புறப்பட்டு சென்றதால் 17 பயணிகள் விஜயவாடா விமான நிலையத்தில் சிக்கி தவித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
காலை 11 மணிக்கு விமானம் கிளம்பும் என தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 9:55 மணிக்கு விமானம் புறப்பட்டு விட்டதாக கூறப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பயணிகள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளில் விமானம் புறப்படும் நேரம் மதியம் 1.10 என்றும் புறப்படும் நேரம் மாற்றம் குறித்து தங்களுக்கு எந்தவித தகவலும் இல்லை என்றும் கூறுகின்றனர்.

1.10க்கு விமானம் புறப்படும் என்பதால் 11 மணிக்கு விமான நிலையத்துக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் புதிய புறப்படும் நேரம் குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் பயணிகள் புகார் அளித்துள்ளனர்.
பயணிகள் விமான நிலையத்தில் உள்ள விமான நிலைய ஊழியர்களிடம் இது குறித்து கூறிய போது ’டிக்கெட்டுகள் விற்கப்படும் போது பல்வேறு இணையதளங்களில் நேரமாற்றம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் புறப்படும் நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டால் இணையதளங்களில் நாங்கள் எவ்வாறு சரி பார்க்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் எஸ்எம்எஸ் அல்லது போன் கால் செய்ய வேண்டாமா என்று பயணிகளில் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனை அடுத்து முன்பதிவு செய்யப்பட்ட விமான பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். விமான முன்கூட்டியே கிளம்புகிறது என்றால் அது குறித்த முறையான அறிவிப்பை பயணிகள் அனைவருக்கும் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.