ஆட்டோமொபைல்

வாகன புதுப்பிப்பு சான்று பெற கட்டணம் 15 மடங்கு அதிகரிப்பு – லாரி உரிமையாளர்கள் குமுறல்

Published

on

ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றம் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகன தகுதிச்சான்றிதழ் கட்டண உயர்வு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை நவம்பர் 11ம் தேதி வெளியிட்டது. இது தொடர்பான ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகளை பெற்ற அமைச்சகம் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு இக்கட்டணம் ரூ.600லிருந்து ரூ.1000 ஆகவும் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு ரூ.2000 ஆகவும் உயர்த்தி அறிவித்தது.

அதே போல 15 ஆண்டுக்கு மேற்பட்ட லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கு இக்கட்டணம் ரூ.850லிருந்து ரூ.12500 ஆகவும் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு ரூ.25000 ஆகவும் தகுதிச்சான்று புதுப்பித்தல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பழைய கார் வேன் லாரி உள்ளிட்ட வாகனங்களை ஸ்கிராப் செய்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்க வேண்டும் எனவும் ஒன்றிய அரசு வலியுறுத்துகிறது.

இந்த நிலையில் திடீரென ஆண்டுதோறும் செலுத்தும் எப்.சி. கட்டணத்தை ஒரே சமயத்தில் 15 மடங்கு அதிகரித்திருப்பது கனரக வாகன உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே டீசல் விலை உயர்வு சுங்ககட்டண உயர்வு பராமரிப்பு செலவு குறைவான லோடு ஆர்டர்கள் ஆகியவற்றால் நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் இந்த கட்டண உயர்வு எங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எங்களின் தொழில் பாதிக்கப்படுவதுடன் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரவும் வாய்ப்பிருக்கிறது. சிறிய நடுத்தர வாகன உரிமையாளர்களின் மாத வருமானமே ரூ.10000 முதல் ரூ.15000 வரையில்தான் இருக்கிறது. இதில் எப்.சி வாங்க இவ்வளவு பெரிய தொகையைக் கேட்டால் எங்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் என்று கூறுகின்றனர்.

15 வருடங்களுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வாங்க வேண்டும் என்றால் குறைந்தது ரூ.30 லட்சம் தேவைப்படும். குறைந்த வருமானத்தில் வாழ்ககையை நடத்தும் எங்களால் புதிய வாகனத்தை பல லட்சம் கொடுத்து வாங்குவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

லாரி உரிமையாளர்கள் சிலர் கூறுகையில் தற்போது ஜி.எஸ்.டியுடன் சேர்த்து ரூ.33 ஆயிரம் கட்டணமாக நிர்ணயித்து ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசும் இதனை செயல்படுத்தி இருப்பது வேதனை அளிக்கிறது. கேரளாவில் தகுதிச்சான்று கட்டண முறையை ஓராண்டுக்கு தள்ளி வைத்தள்ளனர். ஜார்க்கண்டில் இந்த கட்டணத்தை ரத்து செய்துள்ளனர். இதேபோல் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இந்த கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

மேலும் வாகன கொள்கையை மறுபரிசீலனை செய்து முழுமையாக வாகனங்களை அழிக்கும் நடவடிக்கைகளை கைவிட்டு விலக்கு அளித்து எங்களை காக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

Trending

Exit mobile version