சினிமா
விக்ரமின் ‘தங்கலான்’ பான் வேர்ல்ட் படமாக வெளியிடத் திட்டம்!

‘தங்கலான்’ திரைப்படத்தை உலக மொழிகளில் வெளியிட இருப்பதாக இதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பார்வதிய, மாளவிகா மோகனின், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து வரக்கூடிய திரைப்படம் ‘தங்கலான்’. கேஜிஎப் களத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. இதற்காக கர்நாடகா, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது கர்நாடகாவில் நடந்து வரக்கூடிய படப்பிடிப்பு முடிவடைய இருப்பதை அடுத்து படக்குழு மதுரை செல்ல இருக்கிறது.
அங்கு இரண்டு வாரங்களுக்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கக்கூடிய நிலையில் விரைவில் ‘தங்கலான்’ திரைப்படம் இறுதி கட்டத்தை எட்ட இருக்கிறது. இதனை அடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடித்து இந்த வருட இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். முதலில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பான் இந்தியா அளவில் படத்தை வெளியிட இருப்பதாகப் படக்குழு அறிவித்திருந்தனர்.
ஆனால், இப்பொழுது உலக மொழிகளில் பலவற்றில் ‘தங்கலான்’ படத்தை டப் செய்து வெளியிட இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பாளர், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். இது விக்ரம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.