இந்தியா
வனப்பகுதியை ஆக்கிரமித்து தனிநபர் சொந்த பயன்பாட்டிற்கு கட்டிய அணையை இடிக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடிஅருகே பண்ணைப்பட்டி கோம்பை வனப்பகுதியில் குணசீலன் என்பவருக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது. இவர் இப்பகுதி ஓடைகளில் இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக சென்ற நீரை மறித்து அனுமதியின்றி சொந்த பயன்பாட்டிற்காக ஒரு லட்சம் கனஅடியில் 2 நீர்த்தேக்க அணைகளை கட்டி கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார்.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் அந்த நபரிடம் சென்று கேட்ட போது “எனக்கு சொந்தமான இடத்தில் தான் அணைகளை கட்டியுள்ளேன். யாரும் கேள்வி கேட்க முடியாது“ எனக்கூறி அனுப்பி விட்டார். எனவே அவர்கள் வனத்துறையினருக்கு புகார் அளித்ததை அடுத்து வனக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இந்த இரண்டு அணைகளும் அரசு மற்றும் வனத்துறையினருக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து கட்டியுள்ளது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான விசாரணையின்போது “எனது இடத்திற்கான ஆவணங்கள் உள்ளன“ எனக் கூறியுள்ளார். வனத்துறையினர் அந்த ஆவணங்களை கேட்டதற்கு அவர் அத்தகைய ஆவணம் எதையும் சமர்ப்பிக்கத் தவறியதால் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு இரண்டு அணைகளையும் உடைத்து அதில் தேக்கி வைத்திருந்த நீரை கோம்பை அணைக்க மக்கள் பயன்பாட்டிற்கு வரும்படி வனத்துறையினர் செய்தனர். .இதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வனத்துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
வனத்துறையினர் அந்த அணைகளை இடித்ததை எதிர்த்து அந்த தனிநபர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது திண்டுக்கல் கன்னிவாடி மலைப்பகுதியில் கட்டப்பட்ட அந்த அணையை இடிக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. வனத்துறை அந்த அணையை சேதப்படுத்தியிருந்தால் அதை மீண்டும் வனத்துறையே சீரமத்து அந்த நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.













